
கோத்தா திங்கி, மார்ச்-17 – ஜோகூர், கோத்தா திங்கியில் நேற்றிரவு 10.40 மணியளவில், கணவன் மனைவி பயணித்த வாகனம், பாதையை மறித்து நின்ற யானை மீது மோதியதில், அவர்களுக்கு இலேசான காயம் ஏற்பட்டது.
அவர்களின் Mitsubishi Xpander வாகனமும் அதில் சேதமடைந்ததாக, மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் யூசோஃப் ஒத்மான் (Yusof Othman) தெரிவித்தார்.
விபத்துக்குப் பிறகு யானை அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குத் திரும்பியதாக நம்பப்படுகிறது .
இவ்வேளையில், அச்சம்பவம் குறித்து இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை என, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN கூறியது.
நேற்று, ஜோகூர் மந்திரி பெசார், டத்தோ ஓன் ஹஃபிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் பாதுகாப்பை சமநிலைப்படுத்த ஒரு விரிவான தீர்வு தேவை எனக் கூறியிருந்தார்.
அதற்குக் காரணம், ஜோகூரில் 120 முதல் 160 காட்டு யானைகள் உள்ளன.
எனவே, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலைத் தவிர்க்க, மாநில அரசு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால யுத்திகளை வகுத்துள்ளதாக அவர் சொன்னார்.
குறுகிய கால நடவடிக்கையாக, அரசாங்கம் யானை நடமாட்டம் அதிகமுள்ள hotspot பகுதிகளில் கட்டுப்பாட்டை அதிகரிக்கும்; அதே சமயம், PERHILITAN பனியாளர்களும் அதிகரிக்கப்பட்டு, காட்டு யானைகள் பொருத்தமான இடங்களுக்கு மாற்றப்படுமென்றார் அவர்.