Latestமலேசியா

கோர விபத்தில் அண்ணன்-தங்கை படுகாயம்; கனரக லாரி இயக்க நேரத்தைக் கட்டுப்படுத்த பினாங்கு ம.இ.கா கோரிக்கை

சுங்கை பாக்காப், பிப்ரவரி-19 – அனைத்து சாலைப் பயனீட்டாளர்களின்
பாதுகாப்புக்காக, கனரக லாரிகளின் இயக்க நேரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சு பரிசீலிக்க வேண்டும்.

பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ.தினகரன் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சுங்கை பாக்காப், ஜாலான் பெசாரில் நிகழ்ந்த கோர விபத்தில் முதலாம் ஆண்டு மாணவன் இடது கையையும், பாலர் பள்ளியைச் சேர்ந்த 5 வயது மாணவி வலது காலையும் இழந்துள்ள சம்பவம் குறித்து கருத்துரைத்த போது, அவர் அதனை வலியுறுத்தினார்.

நடந்த துயர விபத்து குறித்து மாநில ம.இ.கா ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறது.

நிபோங் தெபாலில் இது முதல் சம்பவம் அல்ல; ஒரு மண் லாரி விபத்தில் சிக்கினால், அதன் விளைவுகள் பெரும்பாலும் பயங்கரமானவை – சிலர் சம்பவ இடத்திலேயே இறக்கின்றனர், மற்றவர்கள் படுகாயமடைகின்றனர்.

நேற்றைய விபத்து கூட அதிகாலையில் நிகழ்ந்தது; அப்போது மண் லாரி இருட்டில் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் கூட லாரிகள் இயக்க அனுமதிக்கப்படுமா என தினகரன் கேள்வி எழுப்பினார்.

அல்லது, லாரி ஓட்டுநர்கள் அதிக பயணங்களைத் திரட்ட அவசரப்பட்டு பாதுகாப்பை புறக்கணிக்கிறார்களா என்றார் அவர்.

எனவே இந்த துயர விபத்து மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ், சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமுலாக்க நிறுவனங்களையும் பினாங்கு ம.இ.கா கேட்டுக் கொள்வதாக தினகரன் தனது பத்திரிகைச் செய்தியில் கூறினார்.

நேற்று காலை பள்ளிச் செல்லும் வழியில் 50 வயது பாட்டி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை மண் லாரி மோதியதில், அவரின் 7 வயது பேரனும், அவனது 5 வயது தங்கையும் படுகாயம் அடைந்தனர்.

அம்மாதுவும் தலையில் காயமடைந்தார்.

மூவரும் சுங்கை பாக்காப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!