
கோலாலம்பூர், ஜூலை 28 – சபாவின் பாப்பரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட மூன்று நபர்களை கைது செய்த போலீசார் 936 பிலிப்பைன்ஸ் சண்டை சேவல்களை பறிமுதல் செய்தனர்.
புக்கிட் அமானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் (Azmi Abu Kassim) இதனைத் தெரிவித்தார்.
கோத்தா கினாபாலு கால்நடை சேவைகள் துறையுடன் இணைந்து வெள்ளிக்கிழமை காலை 10.35 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கோழிகள் மற்றும் இதர பொருட்களின் மொத்த மதிப்பு 4.7 மில்லியன் ரிங்கிட்டாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 30 இரும்பு கூண்டுகள் மற்றும் கோழிகளின் பயன்பாட்டிற்கான பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் மருந்துகளும் அடங்கும் .
கைது செய்யப்பட்ட நபர்களில் 38 முதல் 59 வயதுடைய ஒரு உள்ளூர் நபரும், இந்தோனேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று அஸ்மி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
உரிமம் இல்லாமல் பறவைகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்த விவகாரம் குறித்து விசாரண நடத்தப்பட்டு வருகிறது.