சீனாவின் DeepSeek AI தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவனங்களுக்கு விழிப்பூட்டுவதாக டிரம்ப் பேச்சு

வாஷிங்டன், ஜனவரி-28, குறைந்த செலவில் சீனா உருவாக்கியுள்ள DeepSeek AI தொழில்நுட்பம், அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ள ‘wakeup call’ அதாவது விழிப்பூட்டலாக அதிபர் டோனல்ட் டிரம்ப் வருணித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் மேலதிக கவனத்தோடு போட்டியிட்டு வெற்றிப் பெற வேண்டுமென்பதையே இது காட்டுவதாக அவர் சொன்னார்.
“நாம் பில்லியன் கணக்கான டாலர்களைக் கொட்டி AI-யை உருவாக்குகிறோம்; ஆனால் சீன நிறுவனம் நம்மை விட வேகமான AI-யை அதுவும் குறைந்த செலவில் தயாரித்துள்ளது.; இது வரவேற்கக் கூடிய ஒன்றே” என மயாமியில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் கூட்டத்தில் டிரம்ப் பேசினார்.
DeepSeek-கின் புதிய மாடலான R1 கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது; ஆனால் டிரம்ப் பதவியேற்புச் செய்திகளே ஆதிக்கம் செலுத்தியதால் அது அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை.
என்றாலும், வாரக் கடைசியில் அமெரிக்க App Store-ரில் Open AI-யின் ChatGPT-யைப் பின்னுக்குத் தள்ளி, அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக இந்த R1 பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அமெரிக்க பங்குச் சந்தையான Wall Street-டில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சிக் கண்டன.
DeepSeek-கின் வெற்றி சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பத் திறனை வெளிகாட்டுகிறது; இதுவே அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.