
கோலாலம்பூர், ஜூலை 11 – வெளிநாட்டு அரசாங்கங்கள் நமது மருத்துவர்களை மலேசிய மண்ணிலேயே நேரடியாக வேலைக்கு தேர்வு செய்யவிருக்கும் திட்டத்தை கொண்டிருப்பதால் நமது சுகாதார அமைப்பில் விரைவான மறுசீரமைப்பு தேவையென ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரான டாக்டர் நோவலன் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை நமது சுகாதார அமைச்சுக்கும் நிர்வாகத் தலைவர்களுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கிறது. சரியான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாவிட்டால், நமது சுகாதாரத் துறையின் அடித்தளமே பாதிக்கப்படும் அபாயம் இருப்பதை நோவலன் சுட்டிக்காட்டினார்.
மலேசிய மருத்துவர்களை நேரடியாக பணியில் சேர்க்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு , கோலாலம்பூரிலுள்ள பிரபலமான ஹோட்டலில் நேர்முகத் தேர்வை நடத்த இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு, ஆண்டுக்கு 385,000 ரிங்கிட் வரை ஊதியமும் , மாதக் குடியிருப்பு தொகை, ஒருமுறை இடமாற்றச் சலுகை, அதிக நேர ஊதியம், போனஸ், விமானச் டிக்கெட்டுகள் , காப்புறுதி மற்றும் பலவகையான சலுகைகளும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய மருத்துவ நிபுணர்களின் திறன் அனைததுலக அளவில் உயர்வாக மதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுவதுடன், நமது சுகாதாரத் துறையில் நீண்ட காலமாக நிலவி வரும் பின்னடைவு, ஊக்கமின்றி உள்ள சூழ்நிலை, மற்றும் நிபுணர்களை நாட்டில் நிலைத்திருக்க முடியாத வருத்தமான சூழ்நிலையைப் பகிரங்கமாக வெளிச்சமிடுகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் , மலேசிய சுகாதார பணியாளர்களுக்கான கூடுதல் நேர வேலை (On-Call) கொடுப்பனவுகளை ( allowance) அதிகரிக்க அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
எனவே நமது மருத்துவர்கள் தொடர்ந்து இந்நாட்டிலேயே தொழில்புரிந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அவர்களுக்கான ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் விவகாரத்தில் சுகாதார அமைச்சு விரைந்து கவனம் செலுத்த வேண்டுமென ம.இ.கா தேசிய சுகாதார பிரிவின் தலைவருமான நோவலன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.