Latestமலேசியா

சுங்கை பூலோவில் RM1.2 மில்லியன் கல்வி உதவி; 4,000 மாணவர்கள் பயன்

சுங்கை பூலோ, ஜனவரி-18-சிலாங்கூர், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் கல்வி உதவி நிதியாக RM1.2 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2024 முதல் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

உதவிப் பெற்றவர்கள், பல்வேறு பின்புலங்கள் குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ உதவித் திட்டம் உயர் கல்வி உதவித் திட்டம், SPM சிறந்த மாணவர்களுக்கான சன்மானத் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டன.

சுங்கை பூலோவில், அமானா இக்தியார் மலேசியா ஒத்துழைப்புடன் பள்ளி தொடக்க உதவிகளை வழங்கிய நிகழ்வில் அமைச்சர் பேசினார்.

அந்நிகழ்வில், 1,000 சிறார்கள் உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்; அவர்களில் 750 பேருக்கு பள்ளி தொடக்க உதவி நிதியாக RM150 வழங்கப்பட்டது; ஏனையோர் பள்ளிப் பை, சீருடை, எழுத்து உபகரணங்கள் போன்றவற்றைப் பெற்றனர்.

குடும்பச் சுமையை குறைத்து, மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என்றார் அவர்.

‘கல்வியே எதிர்காலத்தின் திறவுகோல்’ என வலியுறுத்திய ரமணன், மேலும் பல கல்வி திட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!