
செந்தூல், மார்ச்-3 – ‘பொருளாதார வளர்ச்சி, சமுதாயத்தின் மலர்ச்சி’ என்ற தாரக மந்திரத்துடன், ஒரு சக்திவாய்ந்த புதியப் பொருளாதார அதிகாரமளிப்பு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளார் முன்னாள் பஹாங் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரை ராஜூ.
நிதி சிரமங்கள் உட்பட வாழ்க்கையில் பல்வேறு தடைகளை எதிர்நோக்குபவர்களுக்கு, இத்திட்டம் 1,500 ரிங்கிட் கடனை வழங்குவதாக காமாச்சி தெரிவித்துள்ளார்.
உடனடி நிதி வாய்ப்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முயற்சியின் வாயிலாக, பங்கேற்பாளர்கள் சேர்ந்த மறுநாளே சம்பாதிக்கத் தொடங்கலாம்.
வெறும் 500 ரிங்கிட் முதலீட்டில் முதல் 2,000 பங்கேற்பாளர்களுக்கு இந்த திட்டத்தில் பங்கேற்க முடியும்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள், விவேகக் கைப்பேசிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்தவர்கள், வேலை செய்யும் நபர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் செயலாக்க வருமானத்தை ஈட்ட விரும்புவோர் இதில் இணையலாம்.
மலேசியர்களுக்கான நிதி வாய்ப்புகளை மாற்றும் வகையிலான இந்த முயற்சியில் இந்தியர்கள் கட்சி வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
இது குறித்து பல்வேறு இடங்களில் தொடர் விளக்கங்கள் மற்றும் தகவல் அமர்வுகள் நடைபெறும் என்றும் காமாச்சி தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.