கோலாலம்பூர், ஜனவரி-3 – சரவாக், மூலுவில் உள்ள தனது சொந்த ஊருக்கு படகுச் சேவையின் மூலம் Perodua Axia காரை கொண்டுச் சென்ற பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது.
இழுவை லாரியின் மூலம் அக்கார் தூக்கி படகின் முன்புறம் வைக்கப்படுவது, Ferrera Paris எனும் 32 வயது அப்பெண் டிக் டோக்கில் பதிவேற்றிய வீடியோவில் தெரிகிறது.
பாராம், மாருடியிலிருந்து 6 மணி நேரமாக அந்தப் படகு பயணித்துள்ளது.
கிராமத்தில் தன் பெற்றோர்கள் பயன்பாட்டுக்காக அக்காரை அவர் அனுப்பியுள்ளார்.
உண்மையில் அந்தப் படகுச் சேவை அவரின் குடும்பத் தொழிலாகும்.
மூலுவுக்குத் தரை வழியாகச் செல்வதென்றால் வெட்டு மர சாலை மட்டுமே உண்டு; அதுவும் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது.
எனவே, படகுச் சேவையை நடத்தி வருகிறோம்; இதுநாள் வரை மற்றவர்களின் வாகனங்களைத் தான் ஏற்றிச் சென்றோம்; இன்று சொந்த காரே அதிலேறியுள்ளது என Ferrera சொன்னார்.
அப்படகில் 6 முதல் 8 டன் எடை வரையில் ஏற்றிச் செல்ல முடியும்.
இதற்கு முன் அவரின் தந்தை 4 சக்கர வாகனம் மற்றும் ஒரு லாரியையே படகில் ஏற்றியுள்ளார்.
மூலு வரையிலான படகுச் சேவைக்கு, கார்களின் அளவைப் பொருத்து, 5,000 ரிங்கிட் முதல் 9,000 ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
அதுவே லாரி என்றால், ஆபத்து மற்றும் ஆற்று நீர் மட்டத்தைப் பொருத்து, 15,000 ரிங்கிட் முதல் 20,000 ரிங்கிட் வரை கட்டணம் விதிக்கப்படுவதாக Ferrera கூறினார்.