
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – ஓர் இந்துவான தாம், நெற்றியில் இட்டிருக்கும் புனித திருநீறு குறித்து பெர்லிஸ் முஃப்தி Mohd Asri Zainul Abidin பேசிய பேச்சை, அவமானமாகக் கருதுவதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கூறியிருக்கிறார்.
தன்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்துக்களையும் அவரின் பேச்சு அவமானப்படுத்தியுள்ளது.
Dr Maza என பரவலாக அழைக்கப்படும் அவர், என் நெற்றியில் நான் வைக்கும் விபூதி குறித்து சம்பந்தமே இல்லாமல் எதற்காக பேசினார் என தமக்குப் புரியவில்லை என, மக்களவையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ராயர் கூறினார்.
எனவே, சில தினங்களுக்கு முன் இனவெறியைத் தூண்டும் வகையில் நடந்துகொண்ட செப்பாங் சோள வியாபாரியைப் பின்பற்றி, Dr Maza-வும் மன்னிப்புக் கேட்பாரா என ராயர் கேள்வி எழுப்பினார்.
“இந்தியர்களுக்கு சோளம் கிடையாது” என்பதை இழிவானச் சொற்களைப் பயன்படுத்தி அறிவிப்பு அட்டையை வைத்திருந்த அச்சோள வியாபாரி, சமூகத்தின் கடும் கண்டனங்களைத் தொடர்ந்து நேற்று மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் Dr சாக்கிர் நாயக் குறித்து நாடாளுமன்றத்தில் ராயர் பேசியது தொடர்பில், பெர்லிஸ் முஃப்தி முன்னதாக காரசாரமான வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் அவர், எப்படி ராயர் அவர் நெற்றியில் எதை பூசுகிறார், எதற்காக பூசுகிறார் என நான் கேட்பதில்லையோ, அதே போல் என் சொற்பொழிவுகளுக்கு நான் யாரை கூப்பிடுகிறேன், எதற்காக கூப்பிடுகிறேன் என்பதைக் கேட்க ராயருக்கு உரிமையில்லை எனக் கூறியிருந்தார்.
ஜனவரியில் பெர்லிஸில் தாம் நடத்திய சொற்பொழிவுக்கு Dr சாக்கிர் நாயக் உள்ளிட்டோரை Dr Maza அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.