
கோலாலம்பூர், பிப் 24 – நெடுங்காலமாக சொந்தக் கட்டிடமின்றி இயங்கி வந்த பஹாங், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்சைனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான வழிவகையாக அப்பள்ளியின் மேலாளர் வாரியம் ROS எனப்படும் சங்கங்களின் பதிவகத்தில் முறையாக பதிவு பெற்றுள்ளது.
இலக்கவியல் அமைச்சு, கல்வியமைச்சின் ஒத்துழைப்போடு செயல்பட்டதன் வழி, பதிவு இலாகாவில் பள்ளி மேலாளர் வாரியம் முறையாகப் பதிவு பெற்றிருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
ROSன் கீழ் இதுவரை பதிவு செய்யப்படாத பள்ளி வாரியத்தின் (LPS) நிலை காரணமாக இந்த பள்ளிக்கான நிரந்தர கட்டிட நிர்மாணிப்பு பணி தாமதத்தை எதிர்கொண்டதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்குடன் தமிழ்ப்பள்ளிகளின் விவகாரம் குறித்து கலந்துரையாட சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதில் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்கொள்ளும் சவால் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கோபிந்த் சிங் கூறினார்.
அதன் விளைவாக இன்று, ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் வெற்றிகரமாக சங்கங்களின் பதிவகத்தில் பதிவு பெற்றுள்ளது.
இதன்வழி இனி அந்த பள்ளி சொந்தக் கட்டிடத்தில் இயங்குவதற்கான உடனடி தீர்வைக் காண கல்வி அமைச்சுடன் நாங்கள் விரைந்து பணியாற்றுவோம் என கோபிந்த் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.