![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/MixCollage-03-Feb-2025-01-20-PM-5278.jpg)
ஜெராம் பாடாங், பிப்ரவரி-3 – நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங்கில், வாரத்திற்கு 3 முறை இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை செய்ய வேண்டியுள்ள நோயாளியை சட்டமன்ற உறுப்பினர் உதாசீனப்படுத்தியுள்ளாரா?
வேலையில்லாத கிளமௌண்ட் என்ற டயாலிசிஸ் நோயாளியும் அவரின் மனைவி மாயாவும், 5 முறை உதவி கேட்டு சென்றும், ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாறாக, 2 முறை தலா 100 ரிங்கிட்டை மட்டும் கொடுத்து அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதுதான் தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆற்றும் சேவையா என, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செகுத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர் சஞ்சீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாத தவணைப் பணம் ஓராண்டாக நிலுவையில் உள்ளதால் வீடும் ஏலத்திற்கு வந்து விட்டது; அத்தம்பதியரின் 10 வயது மூன்றாவது மகனோ, இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான்.
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான நெகிரி செம்பிலான மாநில பட்ஜெட்டில் 5 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்ட AV Fistula அறுவை சிகிச்சை உதவித் திட்டத்தின் வாயிலாக, பாதிக்கப்பட்ட நபருக்கு ஏன் உதவி வழங்கப்படவில்லை?
எதிர்கட்சியினர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிவதை விடுத்து, ஜெராம் பாடாங் மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் அச்சட்டமன்ற உறுப்பினர் கவனம் செலுத்தலாமே என சஞ்சீவன் கூறியிருக்கின்றார்.
முன்னதாக, மாநில எதிர்கட்சித் தலைவர் ஹனிஃபா அபு பாக்கெருடன் கிளமௌண்ட் குடும்பத்தாரை நேரில் சென்று சஞ்சீவன் நலம் விசாரித்தார்.
அதன் போது அக்குடும்பத்துக்கு சிறிய பண உதவியும் வழங்கப்பட்டது.