ஒட்டாவா, நவ 13- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின்போது நியூசிலாந்து காற்பந்து அணியின் பயிற்சியை கண்காணிப்பதற்கு சட்டவிரோதமாக டிரோன் சேவையை பயன்படுத்தியதை தொடர்ந்து அனைத்துலக காற்பந்து சங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட கனடா மகளிர் காற்பந்து குழுவின் பயிற்சியாளர் பெவ் பிரிஸ்டுமென் ( Bev Priestman) மற்றும் அவரது இரு உதவியாளர்களும் தங்களது பயிற்சியாளர் சேவையிலிருந்து விலக்கப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்ட பின் இந்த முடிவை கனடா காற்பந்து சங்கம் இன்று காலையில் அறிவித்தது. Bev மற்றும் துணை பயிற்சியாளர் Jasmine Mander ஆகியோர் மற்றொரு உதவியாளர் Joey Lombardiயிடம் டிரோனை பறக்கவிட்டு நியூசிலாந்து குழுவின் முதலாவது பயிற்சியை தெரிந்துகொள்வதற்கு உத்தரவிட்டதோடு அதனை அங்கீகரித்தாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கனடா வெற்றி பெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின்போது கனடாவின் மூன்று பயிற்சியாளர்களையும் அனைத்துலக காற்பந்து சங்கமான பிபா (FIFA) வெளியேற்றியதோடு ஒரு ஆண்டிற்கு இடைநீக்கம் செய்தது.
இந்த முடிவைத் தொடர்ந்து கனடா மகளிர் காற்பந்து குழுவிற்கான புதிய பயிற்சியாளரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டுரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட நியூசிலாந்து குழுவினரின் பயிற்சியை கனடா குழுவினர் பார்க்கவில்லை என டோரொன்தோவை (Toronto ) சேர்ந்த வழக்கறிஞர் சோனியா ரெஜின்போகன் (Sonia Regenbogen ) என்பவரால் மேற்கொள்ளப்பட்ட சுயேட்சை விசாரணையில் கண்டறியப்பட்டது.