கோலாலம்பூர், டிசமபர் 23 – திருமுறைப் பயிற்சி மையமாக திகழும் பண்ணிசைப்பாடசாலை, தனது வரலாற்றுப் பக்கங்களில் முக்கியமான நிகழ்வாக, முதல் பட்டமளிப்பு விழாவை “தமிழிசைப்பயணம் 24” என்ற தலைப்பில் வெகு விமர்சையாகக் கொண்டாடியது.
2019-இல் தொடங்கப்பட்ட பண்ணிசைப்பாடசாலை, தேவார திருவாசக பாடல்களின் பண்ணிசையை மூன்று நிலைகள் கொண்ட பாடத்திட்டம் மற்றும் சான்றிதழ் முறைகளுடன் கற்றுத் தரும் முதன்மையான பள்ளியாகத் திகழ்கிறது.
இங்கு வழங்கப்படும் நான்கு வருட திருக்குறிப்பு பாடநெறியின் அடிப்படையில், திருமுறைப்பண்ணிசை பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 126 மாணவர்களுக்கு, நேற்று இவ்விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.
மலேசியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்வி மையமாக திருமுறைப்பண்ணிசை பட்டமளிப்பு விழாவை நடத்திய இடமாக பண்ணிசைப்பாடசலை சிறப்பிடம் பெற்றுள்ளது என்பது இதன் மிகப்பெரிய பெருமையே.
இந்நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக, பண்ணிசைப்பாடசாலை மாணவர்கள் தேவரா மூவரின் 24 தேவாரப்பாடல்களை ஒரே மேடையில், ஒரே நிகழ்ச்சியில் பண்ணிசை வடிவில் பாடி, பண்ணிசை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டினர்.
கலையையும் பக்தியையும் ஒன்றிணைத்து 200 மாணவர்கள் தேவாரப்பாடல்களைப் பாடி, உலகளாவிய திருமுறை சமூகத்தினருக்குப் பண்ணிசையை அறிமுகப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றினர்.
திருமுறையைப் பக்தி இசையாக மட்டுமல்லாமல், அதன் பண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பண்ணிசையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பண்ணிசைப்பாடசாலையின் நோக்கமாகும்.