கோலாலம்பூர், டிசம்பர்-19 – நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் நவம்பர் 30 வரைக்குமான மொத்த ஆசிரியர் பணியமர்வு 8,709 பேர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு 184 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அதே சமயம், தமிழ் மொழிப் பாட ஆசிரியர்களுக்கான தேவை 1,420 பேராக இருக்கும் நிலையில், அதை விட 277 பேர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், இடைநிலைப் பள்ளிகளை எடுத்துக் கொண்டால், தமிழ்ப் மொழிப் பாட ஆசிரியர்களுக்கான மொத்தத் தேவை 605 பேராகும்.
ஆனால், கூடுதலாக 14 பேரையும் சேர்த்து மொத்தமாக 619 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலவையில் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், கல்வி அமைச்சு அவ்விவரங்களை வழங்கியது.
தமிழ்ப் பள்ளிகளில் 290 ஆசிரியர் காலியிடங்களையும், இடைநிலைப் பள்ளிகளில் 50 தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான காலியிடங்களையும் நிரப்ப கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்து லிங்கேஷ்வரன் கேட்டிருந்தார்.
அப்பணிகளுக்கு 69 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் எப்போது நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்ற விவரங்களையும் Dr லிங்கேஷ் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சு, நேர்முகத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டு, தமிழ் மொழியை விருப்பப் பாடமாகக் கொண்ட 29 பேருக்கு ஆசிரியர் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு விட்டதாக கூறியது.
அவர்கள் விரைவிலேயே காலியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.