
கோலாலம்பூர், டிசம்பர்-14 – சிலாங்கூர், பண்டார் சன்வேயில் போலீஸ் தடுப்புக் காவலில் உயிரிழந்த எஸ். மணிசேகரன் வழக்கில் “தாமதமாகும் நீதி, அநீதியாகும்!” எனக் கூறி இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
9 மாதங்கள் கடந்தும் விசாரணை முடிவடையாமல் இருப்பது குறித்து அவர் ஏமாற்றமும் கவலையும் தெரிவித்தார்.
இந்த தாமதம் குறித்து தேசியப் போலீஸ் படைத் தலைவர் விளக்கியாக வேண்டும் என, DAP தேசியத் தலைவருமான கோபிந்த் சிங் கேட்டுக் கொண்டார்.
விசாரணையில் ஏற்படும் தாமதங்கள், சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.
எனவே சட்டத்துறை தலைவர் உத்தரவிட்டபடி, போலீஸ் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்…
மணிசேகரனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தகவல் வழங்கப்பட வேண்டும்… என்றும் கோபிந்த் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு விரைவில் எடுத்துச் செல்லவிருப்பதாகவும், இத்தகைய சம்பவங்களில் கட்டாய காலவரம்புகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அவசியம் என அவரிடம் வலியுறுத்தப் போவதாகவும் கோபிந்த் சிங் சொன்னார்.



