
கிள்ளான், ஏப்ரல்-14, அடைமழை வரும் போதெல்லாம் சிலாங்கூர், ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடாவில் திடீர் வெள்ளப் பிரச்னைத் தொடர்கதையாகி விட்டது.
ஆனால் இதுவரை நிரந்தரத் தீர்வுக் காணப்படவில்லை; அரசாங்கம் என்ன செய்கிறது என அப்பகுதி வாழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிகாரத்திலிருப்பவர்கள், அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என ஒவ்வொரு முறையும் வாக்குறுதி தருகிறார்கள்.
ஆனால், அடிக்கடி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் எங்களை வந்து பார்ப்பதற்கோ கள நிலவரத்தைக் ஆய்வு செய்யவோ நாதியில்லை என இன்று பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் தெரிவித்தனர்.
அணைக்கட்டுப் பகுதியில் தண்ணீரை வெளியேற்ற 6 பம்ப்புகள் இருக்க வேண்டிய இடத்தில் 3 பம்ப்புகள் தான் இருக்கின்றன; அவை கூட வேலை செய்கின்றனவா இல்லையா என்பது தெரியவில்லை.
போதாக் குறைக்கு, வெள்ளத் தடுப்பு கட்ட வேண்டிய இடத்தில் தடுப்பு கட்டப்படவில்லை; மாறாக மணலைக் கொட்டி வைத்துள்ளனர்.
நாங்களும் சொந்த கைகாசில் எங்களால் முடிந்தவற்றை செய்து விட்டோம்.
ஆனால், செய்ய வேண்டியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இன்னும் எத்தனை காலத்திற்கு நாங்கள் அவதிப்படப் போகிறோம்? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இன்னும் எவ்வளவு காலத்திற்கு எங்களுக்கு இந்த அவதி? பொருட்சேதத்தை நாங்கள் எப்படி ஈடுகட்ட் போகிறோம்? விடிவுக்காலம் எப்போது எங்களுக்கு?
இனியும் கண்டு காணாமல் இருப்பதை விடுத்து, இந்த வெள்ளப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வருமாறு தாமா ஸ்ரீ மூடா மக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.