
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 27 – நாடு முழுவதும் தைப்பூச விழா பிப்ரவரி 11ஆம் திகதி கோலாகலமாக நடைபெறவிருக்கும் நிலையில், இவ்வருடமும் முருகன் ஆலயங்களில் கொண்டாட்டங்கள் சமய நெறியுடன், பாதுகாப்பாக மற்றும் சுத்தமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நடைவடிக்கைகளை தைப்பூச பணிக் குழு முன்னெடுத்து வருகிறது.
இதனை செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், இந்த தைப்பூச பணிக் குழுவின் தலைவருமான ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவதற்கு மலேசிய இந்து சங்கம், Clean Thaipusam, Cuci Malaysia, இந்து தர்ம மாமன்றம் போன்ற பல அமைப்புகளுடன் மனிதவள அமைச்சும் கைக்கோர்த்து செயல்படவிருப்பதாக அவர் கூறினார்.
பத்துமலை, சுங்கைப்பட்டாணி, கோல சிலாங்கூர், ஈப்போ, பினாங்கு போன்ற முக்கிய முருகன் ஆலயங்களில் இந்தப் பணிக் குழு நடைவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.
குப்பைகளை அகற்றல் உள்ளிட்ட சுத்தமான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள், மதுபான விற்பனை, சமயத்திற்கு அப்பாற்பட்ட பொருட்களின் விற்பனையைத் தவிர்ப்பது, போக்குவரத்து நெரிசல் போன்ற அம்சங்களில் இந்த தைப்பூச பணிக் குழு முக்கிய கவனம் செலுத்தவிருக்கிறது.
இந்த நடவடிக்கைகளில் கோம்பாக் மாவட்ட போலிஸ் படை, செலாயாங் நகராண்மைக் கழகம், மற்றும் ஆலய நிர்வாகம் இணைந்து பணியாற்றவுள்ளதாக, அவர் கூறினார்.
தைப்பூச பணிக்குழுவின் செயல்பாடுகள் இந்த ஆண்டோடு 11ஆவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் தொடர்ந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேவேளையில், பக்தர்களும் சமய நெறியுடன் திருவிழாவில் கலந்து கொள்ளவும், பொது இடங்களில் ஒழுங்கு மற்றும் சுத்தம் பேணுமாறு இப்பணிக்குழு கேட்டுக் கொள்கிறது.