![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/AA1yw4kX.jpg)
ஈப்போ, பிப்ரவரி-7 – ஈப்போ தைப்பூசக் கொண்டாட்ட இடங்கள் நெடுகிலும் பிப்ரவரி 10 முதல் 12 வரை மதுபானங்களை விற்கவும் உள்கொள்ளவும் பேராக் மாநில அரசு தடை விதித்துள்ளது.
மீறினால் பொது அமைதியை சீர்குலைத்ததன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித வளம், சுகாதாரம், இந்தியர் நலன் மற்றும் தேசிய ஒருமைப்பாடு துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் அவ்வாறு எச்சரித்தார்.
முந்தைய ஆண்டுகளில் தைப்பூசத்திற்கு வந்தவர்களில் ஒரு சிலர் குடித்து விட்டு இரகளையில் ஈடுபட்டது உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து புகார்கள் பெறப்பட்டதே, இவ்வாண்டு அத்தடைக்குக் காரணம் என அவர் சொன்னார்.
முந்தைய ஆண்டுகளில் குறிப்பாக இரவு நேரங்களில் மதுபான விற்பனையும் குடித்தலும் இருந்துள்ளது; ஆனால் கடுமையான நடவடிக்கைகள் இல்லை.
இவ்வாண்டு அப்படி அல்ல; போலீஸார் நிச்சயம் அமைதிக் காக்க மாட்டார்கள்; சம்பந்தப்பட்டோர் உடனடியாகக் கைதுச் செய்யப்படுவர் என சிவநேசன் தெரிவித்தார்.
மாநில அளவிலான 2025 தைப்பூசக் கொண்டாட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
பேராக்கில் தைப்பூசத்தின் போது மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்படுவது இதுவே முதன் முறை என்றார் அவர்.
இவ்வேளையில் ஈப்போ தைப்பூசத்துக்கு இவ்வாண்டு பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் என 350,000 பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக சிவநேசன் சொன்னார்.
Jalan Raja Musa Aziz-சில் உள்ள கல்லு மலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயமும், புந்தோங், ஜாலான் சுங்கை பாரி, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயமும் அங்கு தைப்பூச விழாவுக்கான இரு முக்கிய இடங்களாகும்.