
கோலாலம்பூர், ஜன 13 – நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க புத்ராஜெயாவை கட்டாயப்படுத்துவதற்காக, அது தொடர்பான அவரது வழக்கு மனுவை சீராய்வு செய்வது குறித்து பொதுமக்கள் விவாதிப்பதைத் தடுக்கும் வகையில், அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றைத் தாக்கல் செய்யும். எனினும் நஜிப்பின் வழக்கறிஞர் குழுவுக்கு தலைமையேற்றுள்ள ஷாபி அப்துல்லா இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூட்டரசு மூத்த வழக்கறிஞர் சம்சுல் போல்ஹசான் ( Shamsul Bolhassan ) தெரிவித்தார். நாங்கள் இந்த உத்தரவுக்கு விண்ணப்பித்தோம், மேலும் இது முக்கியமான விவகாரங்கள் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் விசாரணையின் முடிவு தெரியும்வரை தடை நடைமுறையில் இருக்கும் என்று கேட்டுக் கொண்டோம் என நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜிஸ் (Hayatul Akmal Abdul Aziz ) முன்னிலையில் நடந்த வழக்கு நிர்வாகத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது சம்சுல் இத்தகவலை வெளியிட்டார்.
இதன் தொடர்பில் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ மனுவை தாக்கல் செய்யும்படி அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதோடு இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி நஜீப்பிற்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இது பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதால் கடந்த காலங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டதோடு பிரதமர்கூட இது குறித்து நாடாளுமன்றத்திலும் வெளியிலும் விவாதித்துள்ளதால் அரசாங்கத்தின் தடை உத்தரவுக்கான மனுவுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக வழக்கறிஞர் ஷாபி தெரிவித்தார்.