
சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 9 – கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி பீனிக்சிலிருந்து பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், கழிப்பறையில் வேப் புகைத்த பயணி ஒருவர் பிடிபட்டு பின்னர் விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
விமானப் பணிப்பெண் கழிப்பறைக்குள் நுழைந்தபோது அங்கே வேப் புகைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
விமானப் பணிப்பெண், அந்நபரின் செயல் விமானத்தில் இருக்கும் அனைத்து பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எடுத்துரைத்துள்ளார்.
இந்நிலையில் தான் செய்த தவற்றை சற்றும் உணராத அந்த ஆடவன் விமான பணிப்பெண் மீது குற்றம் சாட்டி எதிர் காணொளியை பதிவு செய்தார்.
அதில் அப்பணிப்பெண் தன்னை தொட்டதாகவும் பின்னர் திட்டியதாகவும் கூறிய அந்நபர், விமானம் தரையிறங்கியதும் காவல்துறைக்கு புகார் செய்வதாக மிரட்டினார்.
இந்நிலையில் விமானம் தரையிறங்கியதும், அந்த ஆடவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.