
கோலாலம்பூர், பிப் 20 – மாணவர்கள் வகுப்பறையில் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், உற்பத்தித் திறனுடனும் இருப்பதை உறுதி செய்வதற்காக, சுகாதார அமைச்சும் , கல்வி அமைச்சும் இணைந்து நாடு முழுவதும் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த எளிமையான உடற்பயிற்சி முயற்சியான (X-BREAK) அறிமுகப்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் வேலை நேரத்தில் அரசு ஊழியர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்கான
X-BREAK உடற்பயிற்சி , உடல்நலம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருந்தது என்று சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சவ்னி ( Lukanisman Awang Sauni ) தெரிவித்தார்.
இதனால், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிலையங்களுக்கும் இந்த முயற்சியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். தொடக்கக் கட்டமாக , நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்னர், தற்போது 3,530 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 900 இடைநிலைப் பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ள இளம் மருத்துவர் மன்றத்தின் மூலம் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும் என Lukanisman Awang கூறினார்.