
கோலாலம்பூர், மார்ச்-7 – வடகிழக்கு பருவ மழைக்காலம் இம்மாத மத்தியோடு முடிவடைவதால், தீபகற்ப மலேசியாவின் பெரும்பாலான இடங்கள் குறிப்பாக வட மாநிலங்களில் வெப்பமும் வறண்ட வானிலையும் ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் கடந்தாண்டு அளவுக்கு அது மோசமாக இருக்காது என, இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மை அமைச்சு கூறியது.
தற்போது நிகழும் La Nina வானிலையின் தாக்கமே அதற்கு காரணம்; இதனால் சற்று ஈரமான சீதோஷ்ண நிலை காணப்படுமென அமைச்சு விளக்கியது.
இந்த தென்மேற்குப் பருவமழை, மே தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் கணிப்பின் படி, மார்ச்சில் சபாவின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் வழக்கமான நாட்களை விட மழை 20 முதல் 40 விழுக்காடு குறைவாகப் பெய்யும்.
மேற்கு சரவாக்கில் அந்நிலை ஏப்ரலில் ஏற்படும்.
ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் நாட்டில் வழக்கமான மழைப்பொழிவு இருக்குமென அமைச்சு கூறியது.
என்றாலும் திறந்த வெளி எரிப்பு நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் புகைமூட்டப் பிரச்னையைத் தவிர்க்க இயலாது.
அத்தகைய எரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு தக்க தண்டனை காத்திருப்பதாகவும் அமைச்சு எச்சரித்தது.