Latestமலேசியா

”நிதி திரட்டும் அடிமைகள் நாங்கள், மேலே இருப்பவர்களுக்கோ சொகுசு வாழ்க்கை”: குளோபல் இக்வான் முன்னாள் உறுப்பினர் அம்பலம்

புத்ராஜெயா, செப்டம்பர்-18 – மதத்தின் பேரில் வணிக நடவடிக்கையில் ஈடுபட ஏதுவாக குளோபல் இக்வான் நிறுவனம் அடிமை முறையை அமுல்படுத்தி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

குளோபல் இக்வானின் முன்னாள் உறுப்பினர் என நம்பப்படும் ஆடவர், தனது facebook-கில் அதனை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே சம்பளம் இல்லாமல் முழுநேர வேலை செய்தாலும், ஒவ்வோர் உறுப்பினரும் சபை (jemaah) அல்லது நிறுவனத்தின் கருவூலத்தை நிரப்ப நிதியைத் திரட்டிக் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டோம்.

நன்கொடை கிடைக்காத நேரங்களில், அச்சபை அல்லது நிறுவனத்தில் அங்கம் வகிக்காத குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாங்கள் நாட வேண்டியிருக்கும்.

அதை விட்டால் வேறு வழியில்லை என Raja Suhaimi எனும் அவ்வாடவர் கூறினார்.

குளோபல் இக்வான் நடத்தி வரும் வர்த்தகங்களில் வெகு சில மட்டுமே வணிகப் பொருளாதாரமாகும்; சபைக்கும் நிறுவனத்திற்கும் அந்த சில வர்த்தகங்களால் மட்டுமே வருமானத்தைக் கொண்டு வர முடியும்.

எனவே, கூடுதல் நிதியைத் திரட்டிக் கொடுக்கும் சுமை எங்கள் மீது திணிக்கப்பட்டது.

இதனால் மேலே இருப்பவர்கள் கார், வீடு என சொகுசு வாழ்க்கையும், கீழே இருப்பவர்கள் சொந்தத் துணையைப் பார்க்கக் கூட அனுமதிக்காகவும், தங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.

வயிற்றுக்கு சாப்பாடு போடுவார்கள், தூங்க இடம் தருவார்கள், எங்களுக்குள்ளேயே திருமணத்தை நடத்தி வைப்பார்கள் அவ்வளவுதான்.

மற்றபடி இது முழுக்க முழுக்க அடிமைத் தனம் போன்றது தான் என Raja Suhaimi கூறினார்.

குளோபல் இக்வான் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறார் இல்லங்களில் நிகழ்ந்த பல கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகுமென போலீஸ் முன்னதாக கோடி காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!