கோலாலம்பூர், பிப்ரவரி-8 – தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர் பத்து மலையை நோக்கி
வெள்ளி இரதம் பவனி வரும் நாளன்று, ம.இ.கா தலைமையகத்தில் பக்தர்களுக்காக தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி இரதம் பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கோலாலம்பூர் ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படுகிறது.
வழக்கமான சாலைகளில் பவனி வந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் ம.இ.கா தலைமையகம் முன்புறம் இரதம் வந்தடையும்.
அப்போது ம.இ.கா தேசிய தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில், தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னிலையில் இந்த தண்ணீர் பந்தல் நடைபெறும்.
பக்தர்களின் பசி-தாகம் தீர்க்க குளிர்பானம் மற்றும் உணவு பண்டங்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருக்கிறது.
எனவே வெள்ளி இரதம் முன்னும் பின்னும் நடந்து வரும் பக்தர்களும் பொது மக்களும் ம.இ.கா தண்ணீர் பந்தலில் தங்கள் தாகம் பசியை தீர்த்துக் கொள்ளலாம் என ம.இ.கா பொதுச் செயலாளர் டத்தோ எஸ். ஆனந்தன் கூறினார்.