பார்க்குமிடமெல்லாம் கரப்பான்பூச்சி மற்றும் எலிகளின் எச்சங்கள்; பிரபல பினாங்கு உணவகத்தை 14 நாட்களுக்கு மூட உத்தரவு

ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-18,
ஜோர்ஜ்டவுன் Jalan Penang சாலையில் உள்ள பிரபல உணவகமொன்றில் பார்க்குமிடமெல்லாம் கரப்பான்பூச்சிகளும் எலிகளும் திரிவதோடு, ஆங்காங்ஙே அவற்றின் எச்சங்களும் காணப்பட்டதால், 14 நாட்களுக்கு மூட அது உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று சோதனைக்குச் சென்ற சுகாதார அதிகாரிகளே அவ்வுணவகத்தின் அசுத்தமான நிலையைக் கண்டு முகம் சுளித்தனர்.
சமயலறையின் தரை பிசுபிசுப்பு மிகுந்தும் அருவருக்கத்தக்க வகையிலும் இருந்தது.
மசாலாத் தூள் வைக்கும் டப்பாக்கள் கரப்பான்பூச்சிகளின் ‘தங்குமிடமாக’ இருந்தன.
குளிர்பதனப் பெட்டியின் கதவிலும் கரப்பான்பூச்சிகள் மேய்ந்துக் கொண்டிருந்தன; கோழி இறைச்சிகளும் கணவாய் போன்றவையும் முறையான பத்திரங்களில் வைக்கப்படவில்லை.
உணவுகள் தரையில் வைக்கப்பட்டதோடு, உணவுத் தயாரிக்கும் இடத்தருகே மூடப்படாத குப்பைத் தொட்டி, உடைந்துபோன தரையில் நீர் தேங்கியிருந்தது என மொத்தம் 20 குற்றங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்து உணவக உரிமையாளருக்கு 3,000 ரிங்கிட் உடனடி அபராதம் விதிக்கப்பட்டதோடு நேற்று தொடங்கி 14 நாட்களுக்கு உணவகத்தை மூட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு அதிகாரி எம். சசிகுமார் தெரிவித்தார்.
இவ்வேளையில், அதே சோதனையில் தாய்லாந்து உணவகமொன்றும் அசுத்தம் காரணமாக 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.