
ரோம், ஜூலை-30- புகழ்பெற்ற பார்பி (Barbie) பொம்மை வடிவமைப்பாளர்களான மரியோ பாலினோ (Marioa Paglino), கியானி க்ரோஸி (Gianni Grossi) இருவரும், இத்தாலியில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையில், 82 வயது முதியவர் எதிர் திசையில் நுழைந்து ஓட்டிய வாகனத்துடன், அவ்விருவரின் கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் அவ்விருவருடன் பயணித்த வங்கியாளரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட வேளை, அவரின் மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தவறான சாலையில் புகுந்து விபத்துக்குக் காரணமான அந்த முதியவரும் கொல்லப்பட்டார்.
மரியோ மற்றும் ஜியானியின் மறைவுக்கு, பார்பி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வம இன்ஸ்டகிராம் பக்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
பொம்மைத் தயாரிப்பில் அவ்விருவரின் சேவை காலத்திற்கும் நினைவுக் கூறப்படுமென இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
மரியோ – ஜியானி இருவரும், உலகப் புகழ்பெற்ற பாடகர்களான Cher, Lady Gaga மற்றும் நடிகைகள் Sarah Jessica Parker, Sophia Loren போன்றோரின் பொம்மைகளை வடிவமைத்தும் பிரபலமானவர்கள் ஆவர்.