
பாலிக் புலாவ், செப்டம்பர் 24 –
நேற்று பாலிக் புலாவ் தெலுக் கும்பார், ஜாலான் சுங்கை பாத்து குதியில் 4.5 மீட்டர் நீளமும் 20 கிலோ எடையுமுள்ள ராஜநாகம் ஒன்று பாதுகாப்பு படையினரால் (APM) வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.
தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக பாம்பை பிடிக்கும் வேளைகளில் ஈடுபட்டனர் என்று மாவட்ட APM அதிகாரி லெப்டினன்ட் முகமட் ஃபித்ரி காமிஸ் தெரிவித்தார்.
வீட்டின் வெளியே பழைய மரப்பெட்டியின் கீழுள்ள மரச்சாமான்கள் மத்தியில் பாம்பு மறைந்திருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
சம்பவ இடத்தில் கிராம மக்கள் மற்றும் பார்வையாளர்கள் என பலரும் திரண்டதால் பாம்பைப் பிடிக்கு நடவடிக்கை சற்று சவாலானதாக மாறியுள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு, சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி பாம்பைப் பிடித்த பின்னர் அப்பாம்பு மாவட்ட APM அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறை (Perhilitan) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.