
கோத்தா கினாபாலு, அக்டோபர்-23 – பி.கே.ஆர் கட்சி மடானி கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வட்டார அரசியல் பிரிவினையை நிராகரிப்பதாக, அதன் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“பி.கே.ஆர் என்பது தீபகற்ப கட்சி மட்டுமே என்ற கருத்து தவறானது; கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் சபா மாநிலத்திற்கு வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு 2026 பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளதே அதற்கு சான்று”_ என்றார் அவர்.
சபா, கோத்தா கினாபாலுவில் அமானா இக்தியார் மலேசியா ஏற்பாடு செய்த ‘மடானி ஆஸ்பிராசி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான ரமணன் அவ்வாறு சொன்னார்.
அதில் இனானாம் (Inanam) பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
_“மடானி யாரையும் புறக்கணிக்காது; பிரதமர் MA63 ஒப்பந்தத்தை மேம்படுத்த முனைந்துள்ளார்”_
மேலும், மத்திய அரசு–மாநில அரசு உறவு சகோதர உறவைப் போன்றதாக இருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் ஆதரிப்பதே முன்னேற்றத்தின் வழி என அவர் கூறினார்.
சபா மாநிலத்திற்கு RM6.9 பில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இவ்வேளையில், சபா மாநிலத் தேர்தலுக்கான பி.கே.ஆர் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே கட்சித் தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ரமணன் தெரிவித்தார்.