
பட்டவொர்த், ஜனவரி-26 – மலேசியாவின் மிகப்பெரிய சிவன் ஆலயமாக பினாங்கில் ஸ்ரீ கங்காதர சிவப்பெருமான் ஆலயம் உருவாகவிருக்கிறது.
இராஜகோபுரம் உட்பட மொத்தம் 9 நிலை கோபுரங்களுடன் மிகவுப் பிரமாண்டமான முறையில் அது கட்டப்படுகிறது.
2007-ஆம் ஆண்டில் ஆலயத்தை புதிய இடத்தில் அமைக்கும் முயற்சிகளுக்கு, அப்போதைய துணை முதல்வர் பேராசிரியர் Dr பி. இராமசாமி, 2 ஏக்கர் நிலத்தை அடையாளம் காட்டி வழங்கினார்.
பின்னர் பல தடைகளை சந்தித்த போதும் ஆலய கட்டுமானம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்நிலையில் மலேசியத் தமிழ் சமுதாயத்தின் பக்தி மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கம்பீரமாக எழுந்தருளும் இவ்வாலயத் திருப்பணிக்கு, மொத்தம் 15 மில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது.
இதையடுத்து செபராங் ஜெயாவில் உள்ள தி லைட் நட்சத்திர விடுதியில், ஆலயத் திருப்பணிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலயத் திருப்பணித் தலைவரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ, மாநில மஇகா தலைவர் டத்தோ தினகரன், மேலவை உறுப்பினர் செனட்டர் Dr ஆர் லிங்கேஷ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதில் ஆலயத்தின் மாதிரி வடிவமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
ஆலயத்தின் இறுதி கட்ட பணிக்கான நிதியை பக்தர்களும் தாராளமாக வழங்க வேண்டும் என விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த இசைக் கலைஞர்களின் பக்தி மயமான இசை நிகழ்ச்சியும் அரங்கேறிய அந்நிகழ்வில் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.