
ஜோர்ஜ்டவுன், மார்ச்-11 – பினாங்கு, மாச்சாங் பூபோக்கில் இன்று அதிகாலை போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளோட்டி கொல்லப்பட்டார்.
சந்தேக நபரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை.
அவர் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவராக இருக்கலாமென பினாங்கு போலீஸ் தலைவர் ஹம்சா அஹ்மாட் கூறினார்.
ஜாலான் காஜா மத்தி சாலையில் அதிகாலை 2.20 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகத்திற்குரிய வகையில் ஓர் மோட்டார் சைக்கிளோட்டியைக் கண்டனர்.
அவரை நெருங்கி, பரிசோதனைக்காக, மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போலீஸ் உரக்க கத்திய நிலையில், அவ்வாடவர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றார்.
போலீஸார் விரட்டிச் சென்ற போது, திடீரென அவ்வாடவர் போலீஸை நோக்கி துப்பாக்கிச் சூட்டை கிளப்பினார்.
பதிலுக்கு போலீஸும் சுட்டதில் அந்நபர் சூடு பட்டு அங்கேயே விழுந்து மரணமடைந்தார்.
அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாகியும், ஹெரோயின் வகைப் போதைப் பொருளும் கண்டெடுக்கப்பட்டன.
கொலை முயற்சி, உரிமம் இல்லாமல் சுடும் ஆயுதம் வைத்திருந்தது மற்றும் போதைப்பொருள் விநியோகம் அடிப்படையில் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.