புபனேஸ்வர் (ஒடிஷா), ஜனவரி-8, மலேசிய – இந்திய இரு வழி உறவுகள் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருப்பதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.
குறிப்பாக கலாச்சார மற்றும் சமய உறவு நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டதென அவர் வருணித்தார்.
இனி, அசுர வளர்ச்சி கண்டு வரும் அதிநவீன தொழில்நுட்பத்திலும் இரு நாடுகளும் அணுக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டு நன்மையடையலாமென்றார் அவர்.
இந்திய வம்சாவளியினருக்கான 18-வது பிரவாசி பாரதீய டிவாஸ் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ஒடிஷா மாநிலத் தலைநகர் புபனேஸ்வர் சென்றுள்ள கோபிந்த், அங்கு செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
பன்னாட்டு நிறுவனங்களும் அதில் பங்கேற்கவிருப்பதால், இலக்கவியல் துறையில் பல்வேறு வாய்ப்புகளையும் ஒத்துழைப்புகளையும் மேற்கொள்ள இம்மாநாட்டை மலேசியா நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமென்றார் அவர்.
இலக்கவியல் உருமாற்றத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியும் பிரமிக்க வைக்கிறது; மலேசியாவும் அதில் கற்றுக் கொள்ள நிறைய இருப்பதாக கோபிந்த் சொன்னார்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் சந்திப்பு நடத்தவிருக்கும் கோபிந்த், அங்குள்ள மலேசிய இந்தியச் சமூகத்தையும் சந்திக்கவுள்ளார்.
உலகம் முழுவதுமுள்ள இந்திய வம்சாவளிகளை ஒன்றிணைக்கும் இந்த வருடாந்திர மாநாடு இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
நாளை இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்.