
கோலாலம்பூர், மார்ச்-12 – பிரிக்ஃபீல்ட்ஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லை, 8 அரசு சாரா இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அனைவரும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நடமாட ஏதுவாக, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிப்படும் பகுதியாக பிரிக்ஃபீல்ட்ஸ் திகழ வேண்டுமென்பதே அவர்களின் விருப்பம்.
அதே சமயம், எளிதில் பயன்படுத்தக் கூடிய பொது வசதிகளையும் DBKL ஏற்படுத்தித் தர வேண்டுமென, அரசு சாரா இயக்கங்கள் சார்பில் பேசிய எஸ்.ஷஷிகுமார் கேட்டுக் கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளின் பாதைகளை மறைக்கும் வண்ணம் இஷ்டம் போல் வாகனங்களை நிறுத்தி வைப்பது, அவர்கள் கால் பதிக்கும் இடத்தில் கனரக வாகங்களை நிறுத்துவது போன்றவற்றால் விபத்துகள் அதிகம் நேருகின்றன.
எனவே, பொது வசதிகள் தவறாகப் பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதிச் செய்ய, DBKL அமுலாக்கா நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென ஷஷி குறிப்பிட்டார்.
மோட்டார் சைக்கிள்களும் கார்களும் இஷ்டம் போல் நிறுத்தப்பட்டால், tactline எனப்படும் தொட்டுணர்வு கருவிகள் பொருத்தப்படுவது பயனில்லாமல் போகுமென அவர் கவலைத் தெரிவித்தார்.
ஜாலான் ராஜா லாவோட்டில் உள்ள DBKL தலைமையகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தப் பிறகு ஷஷி குமார் வணக்கம் மலேசியாவிடம் பேசிய போது மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விவரித்தார்.