
கோலாலம்பூர், ஜனவரி-20-மலேசியா தனது வாணிப வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்தாண்டு நாட்டின் மொத்த வாணிபம் என்றும் இல்லாத வகையில் RM3 ட்ரில்லியனைத் தாண்டியதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“இது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்” என மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது அவர் சொன்னார்.
முழு புள்ளிவிவரங்களை மலேசிய வெளிநாட்டு வாணிப மேம்பாட்டு நிறுவனமான MATRADE, இன்றைய தினமே வெளியிடும் என்றார் அவர்.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக சக்திகளின் கொள்கை மாற்றங்கள் மற்றும் வாணிப பதற்றங்கள் நிலவியபோதிலும், சந்தைகளைப் பன்முகப்படுத்துதல் மற்றும் புதியத் துறைகளில் வாய்ப்புகளை ஆராய்ந்தது, மலேசியாவை வலுவாக முன்னேற்றியுள்ளதாகவும் அன்வார் கூறினார்.
மலேசியப் பொருளாதாரம் ஊக்கமளிக்கும் வகையிலிருப்பதற்கான சில ஆதாரங்களையும் புள்ளி விவரத்தோடு அவர் வெளியிட்டார்.
குறிப்பாக, 2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான GDP, அரசாங்கத்தின் எதிர்பார்ப்பையும் மீறி 4.9% வளர்ச்சி கண்டுள்ளது.
அதே சமயம், ரிங்கிட் நாணைய மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.05 என 5 வருடங்களில் மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளது.
கோலாலம்பூர் பங்குச் சந்தை குறியீடும், 7 ஆண்டுகளில் புதிய உச்சமாக 1,700 புள்ளிகளை எட்டியுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டமும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.9% ஆக குறைந்துள்ளது.
முன்னேற்றகரமான இந்த அடைவுநிலைக்கு, அரசியல் நிலைத்தன்மை, தெளிவான கொள்கைகள், அரசாங்கம்–பொதுச் சேவை–வர்த்தகம்- முதலீட்டாளர்கள் ஆகியத் தரப்புகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பை ஆகியவற்றை அன்வார் கரணமாகக் குறிப்பிட்டார்.



