புது டெல்லி, நவம்பர்-19 – இந்தியத் தலைநகர் புது டெல்லியில் வீசும் காற்று, உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கும் அளவை விட 60 மடங்கு அதிக நச்சுத் தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்நச்சளவானது, ஒரு நாளைக்கு 49 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நச்சுக் காற்றை சுவாசிக்கும் போது அதிலுள்ள நுண்துகள்கள் நுரையீரல் வரை சென்று ஆபத்தை ஏற்படுத்தலாம்.
எனவே, இந்த காற்றுத் தூய்மைக் கேட்டை எதிர்கொள்ள அவசியமான மற்றும் அவசரமான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரத் தரப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
புது டெல்லியில் நேற்று காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 481-ராக பதிவாகியது.
இதையடுத்து டிரக், பெட்ரோல், டீசல் லாரிகள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
பொது மக்களும் பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறனர்.
திறந்தவெளி எரிப்பு நடவடிக்கை, பட்டாசு வெடிப்புகள் போன்றவற்றால் அக்டோபரிலிருந்தே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.