
புது டெல்லி, பிப்ரவரி-17 – இந்தியத் தலைநகர் புது டெல்லியை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.36 மணிக்கு ரிக்டர் அளவைக் கருவியில் 4.0-மாக பதிவான நிலநடுக்கம் உலுக்கியது.
இதனால் மாநகர மக்கள் பீதியடைந்தனர்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பதற்றத்தில் வெளியே ஓடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, நொய்டா, குருகிராம், காஜியாபாத் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்திய மாநிலமான பீஹாரிலும் காலை 8 மணிக்கு அதே 4.0 magnitude அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இதுவரை கடுமையான சேதம் அல்லது காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இவ்வேளையில், நில நடுக்கம் குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நிலநடுக்கத்திற்குப் பிறகு தொடர் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அமைதியாக இருக்கவும், வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டார்.
நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்