
கோலாலம்பூர், நவம்பர்-7 – ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை, தனக்கிருக்கும் அதிகாரத்தை வைத்து மிரட்டும் தோரணையில் பேசுவது ஆண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழகல்ல.
அதுவும் அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் அவ்வாறு நடந்துகொள்வது பண்பற்றது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே சிறுமைப்படுத்துவதாகும் என, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் சாடியுள்ளார்.
நேற்றைய மக்களவை விவாதத்தின் போது, சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடினுக்கும் இடையில் நடைபெற்ற வார்த்தைப் போர் குறித்து சஞ்சீவன் தனது X தளத்தில் அவ்வாறு சொன்னார்.
தலைமைத்துவப் பண்பானது ஒருவரை ஒருவர் மதிப்பதும் ஆரோக்கியமாக விவாதம் புரிவதையும் உள்ளடக்கும்;
மாறாக, அதிகாரத் தோரணையில் மிரட்டுவது அல்ல தலைமைத்துவம் என, பெர்சாத்து கட்சியின் முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களுக்கான Sayap Bersekutu பிரிவின் துணைத் தலைவருமான அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இது போன்ற பகடிவதைகளுக்கு எதிராக தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்றும் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.
பட்ஜெட் விவாதத்தின் போது தம்மை தொடர்ந்து குறுக்கிட்டு மாஸ் எர்மியாத்தி விளக்கம் கேட்டதால் சினமடைந்த டத்தோ ஸ்ரீ கிங் சிங், “வா, வெளியில் சண்டையை வைத்துக் கொள்ளலாம்” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.