
கோலாலம்பூர், ஜனவரி-29-பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியை அகற்ற ஒப்புக்கொண்டதாக கூறப்படுவதை, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ ஹாடி அவாங் மறுத்துள்ளார்.
ஜனவரி 16-ஆம் தேதி முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினுடனான கூட்டத்தில் கூட அவ்விவகாரம் பேசப்படவோ, ஒப்புக்கொள்ளப்படவோ இல்லை என ஹாடி தெளிவுப்படுத்தினார்.
பெரிக்காத்தான் தலைவர் பதவியை அகற்றி விட்டு புதிதாக PN தலைவர் மன்றத்தை அமைக்கவிருப்பதாகக் கூறி, கூட்டணிக் கட்சிகளுக்கு அனுப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் நேற்று வைரலானதை அடுத்து, பாஸ் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“பெரிக்காத்தான் நேஷனல் கொள்கைகள் மற்றும் திசைகளை பாதுகாப்பதில், ‘தலைவர் மன்றம்’ ஆலோசனை மற்றும் ஒழுங்குமுறை அல்லது மேற்பார்வை அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தை பாஸ் மீண்டும் வலியுறுத்திகிறது”
ஆனால், நடப்பிலுள்ள தலைவர் பதவி அகற்றப்படக் கூடாது; கூட்டணி அமைப்பு விதிகளின் படி நிலைநிறுத்தப்பட்ட வேண்டுமென ஹாடி வலியுறுத்தினார்.
அதே சமயம்,
பெரிக்காத்தான் உச்ச மன்றம், நிர்வாக மற்றும் வியூக விவகாரங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
பெரிக்காத்தான் கூட்டணியை மறுசீரமைத்து, பெர்சாத்து கட்சி ‘தலைவர் மன்றத்தை’ வழிநடத்தவும், பாஸ் கட்சி ‘நிர்வாக செயற்குழுவுக்குத்’ தலைமை தாங்கவும் ஹாடி அவாங் ஒப்புக் கொண்டுள்ளதாக, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முஹிடின் அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம்
முன்னதாக வாட்சப்பில் வைரலானது.
ஜனவரி 16-ஆம் தேதி முஹிடின் வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் அதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும், அதில் பாஸ் துணைத் தலைவர், பொதுச் செயலாளர் இருவரும் பங்கேற்றதாகவும் அக்கடிதம் கூறியது.
ஆனால் ஹாடி அதனை மறுத்திருப்பதன் மூலம், அந்த எதிர்கட்சிக் கூட்டணியில் தலைமைத்துவப் பிரச்னை வெடித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முஹிடின் பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததும், அதனை தாங்கள் நிரப்பப் போவதாக பாஸ் அறிவித்து வருவதும் தெரிந்ததே.



