
கோலாலம்பூர், ஜன 14 – இந்திய சமுதாய மக்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியடை வேண்டும். அதேவேளை, நம் சமுதாயத்திற்கு இன்றைய அவசியத் தேவை ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் என்பதால், நாம் அனைவரும் ஒரு குடையின்கீழ் ஒருமித்து செயல்படுவதில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது பொங்கல் சிந்தனையாக இருக்க வேண்டும் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
அரசியல் ரிதியாக, மலேசிய இந்தியர்கள் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் சமூக அளவில் நாம் ஒற்றுமையுடன் திகழ்ந்தால்தான், பயனடைய முடியும் என விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் மற்றும் அவர்களது விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில், மஇகா என்றும் தவறியதில்லை. குறிப்பாக, இந்தியர்களின் சமூக-பொருளாதார-கல்வி மேம்பாட்டிற்கு மஇகா என்றென்றும் பாடுபடும். அதற்கான கடப்பாட்டையும் ஈடுபாட்டையும் மஇகா ஒருபோதும் கைவிட்டதில்லை.
எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயமாக நம் சமுதாயம் மலர வேண்டுமென்றால், கல்வி மறுமலர்ச்சி ஒன்றுதான் துணையாக அமையும். அந்த இலக்கைநோக்கிதான் மஇகா நீண்ட காலமாக பயணிக்கிறது. அதற்கு ஏதுவாக டேஃப் கல்லூரியும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன.
எனவே இந்த பொங்கல் திருநாள், மலேசிய இந்திய சமுதாயத்திற்கான அரசியல்-சமூக-பொருளாதார தளங்களில் முன்னேற்றத்தையும் மறுமலர்ச்சியையும் அளிக்க இறையருள் துணை நிற்கும்படி பிரார்த்திப்பதாக எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.