
கோலாலம்பூர், ஜனவரி-30 – பொய்ச் செய்திப் பரவலைத் தடுக்கவும், இணையத்தில் உறுதிச் செய்யப்படாத தகவல்களைப் பயனர்கள் சரிபார்க்கவும் ஏதுவாக, AI உதவியுடன் Chatbot Sebenarnya.my தானியங்கி உரையாடல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Artificial Intelligence Fact-check Assistant அல்லது சுருக்கமாக AIFA என்றும் அழைக்கப்படும் அதனை, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிமுகப்படுத்தினார்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யின் மேற்பார்வையில் 24 மணி நேரங்களும் அது சேவையில் ஈடுபட்டிருக்கும்.
https://sebenarnya.my/ என்ற இணையத் தளம் வாயிலாகவும் 03-86887997 என்ற WhatsApp எண்கள் வாயிலாகவும் இந்த Chatbot.Sebenarnya.my வசதியைப் பயன்படுத்தலாம்.
அனைத்து சாராரும் பயன் பெறும் விதமாக மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளிலும் இந்த AIFA chatbot வசதி தயாராகியுள்ளது.
தற்போதைக்கு உரை வடிவத்தை (text format) மட்டுமே AIFA உள்ளீடாக ஏற்றுக்கொள்ளும்.
வீடியோ, படங்கள் உள்ளிட்ட மற்ற வடிவிலான உள்ளீடுகள் எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளப் படலாமென்றார் அவர்.
நீண்ட காலமாகவே இயங்கி வரும் Sebenarnya.my இணையத் தளத்தை AIFA மூன்று முக்கிய அம்சங்களில் மேம்படுத்துவதாக ஃபாஹ்மி சொன்னார்.
உண்மைத் தகவல்களை மக்கள் மக்கள் விரைவாகவும் எளிதாகவும் சரிபார்க்க உதவுவது, இணையத்தில் உலா வரும் பொய்ச் செய்திகளை விரைந்து கண்டறிந்து பதிலடித் தருவது, மலேசியாவில் பொய்ச் செய்தி பரவலை முறியடிப்பதில் Sebenarnya.my-யின் பணியை வலுப்படுத்துவது ஆகியவையே அம்மூன்று அம்சங்களாகும்.