கிள்ளான், டிசம்பர் 11 – நண்பர் எனக் கண்மூடித்தனமாக நம்பியதின் விளைவாக, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த இரண்டு இளைஞர்கள், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரவில் வெளியே சுற்றி வரலாம் எனும் நண்பர் ஒருவரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று, கிள்ளான், பண்டார் போட்டானிக் பகுதியில் வசிக்கும் இரு இளைஞர்கள் காரில் சென்ற போது பிடிபட்டனர்.
அக்காரைப் பரிசோதித்த போது, அதிலிருந்து 319.70 கிராம் ஷாபு வகைப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, 1952ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 39B பிரிவு மற்றும் பொருளாதாரக் குற்றச் சட்டம் 34 பிரிவின் கீழ் அம்மூவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்த இரு இளைஞர்களும் காரில் பயணிகளாக மட்டுமே இருந்த நிலையிலும், கார் ஓட்டிச் சென்ற நண்பர் போதைப்பொருளுடன் இருந்ததால், மூவரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் வழக்கறிஞர் கோமதி அருணாசலம் உரிய ஆதாரங்களின் மூலம் இரு இளைஞர்களும் குற்றமற்றவர்கள் என நிரூபித்து, அவர்களை முழுமையாக விடுவிக்கச் செய்து நீதி பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இந்த மூன்று ஆண்டுகளில் எதிர்பார்ப்பும் பிரார்த்தனைகளையும் சுமந்து கொண்டு காத்திருந்த 50 வயதிற்கு மேலான குற்றவாளி ஒருவரின் தாய், மகனின் விடுதலை குறித்து ஆனந்தக் கண்ணீரில் ‘நம்பிக்கையே தம்மை வாழ வைத்தது’ என வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இவ்வழக்கின் அடிப்படையில், போதைப்பொருளை உடன் வைத்திருக்கவில்லை என்றாலும், குற்றவாளிகளுடன் உடன் இணைந்ததாலே சட்டத்தின் படி குற்றவாளியாகக் கருதப்பட முடியும் என்பதை வழக்கறிஞர் கோமதி விளக்கினார்.
போதைப்பொருள் மட்டுமல்ல, பல குற்றங்களில் இளைஞர்கள் தவறாக மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள், சந்தேகமான செயல்களில் ஈடுபடுவது தங்களின் வாழ்க்கையையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் என அவர் எச்சரித்தார்.
நீதி வென்றாலும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதே உண்மையான வெற்றியாகும் என வழக்கறிஞர் கோமதி அறிவுறுத்தினார்.