கோலாலம்பூர் – நவ 26 – மற்றொருவரிடமிருந்து 100,000 ரிங்கிட் மோசடி செய்வதற்கு வங்கி அதிகாரி ஒருவரை ஒரு மோசடி கும்பல் பயன்படுத்தியிருப்பதை புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வு கண்டறிந்ததாக அந்தத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசுப் ( Ramli Mohamed Yoosuf ) தெரிவித்திருக்கிறார்.
தொலைபேசி மோசடிக் கும்பலால் 138,000 ரிங்கிட் இழப்புக்கு உள்ளானதாக 37 வயது ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் அம்பலத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.
தனியார் நிறுவனத்தின் நிர்வாகியான அந்த ஆடவர் அக்டோபர் 28 ஆம் தேதி மோசடிக் கும்பலினால் ஏமாந்தது குறித்து போலீசில் புகார் செய்திருப்பதாக இன்று Menara KPJவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரம்லி கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்கு அக்டோபர் நடுப்பகுதியில் இ-காமர்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனையில் சம்பந்தப்பட்டவரின் தொலைபேசி பயன்படுத்தப்பட்டதாக மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டை மறுத்தபோதிலும் அந்த அழைப்பு போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட மற்றொரு நபருடன் இணைக்கப்பட்டது.
விசாரணை நோக்கங்களுக்காக கூறப்படும் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு 38,000 ரிங்கிட் பட்டுவாடா செய்யுமாறு பாதிக்கப்பட்ட ஆடவருக்கு உத்தரவிடப்பட்டது.
அதோடு மேலும் 100,000 ரிங்கிட்டை வங்கி அதிகாரியான ஒரு பெண்ணிடம் நேரடியாக ஒப்படைக்கும்படியும் அந்த நபர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
விசாரணையின் முடிவில் 30 வயதுடைய அந்த பெண்ணும் மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு உதவுவதற்காக அப்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார் என ரம்லி கூறினார்.