
மலாக்கா, டிச 24 – Malaka Tengah மாவட்டத்தில் குறைந்தது 10 குற்றச் செயல்களில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட ‘லோகன் கேங்’ என்று அழைக்கப்படும் வீடு திருடும் கும்பலைச் சேர்ந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மலாக்காவில் 33 மற்றும் 29 வயதுடைய சகோதரர்களான இரண்டு ஆண்கள் மற்றும் 24 வயதுடைய ஒரு பெண் உட்பட மூவரும் டிசம்பர் 15 ஆம்தேதியன்று மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் கிறிஸ்டோபர் படிட் ( Christopher Patit ) தெரிவித்தார்.
ஜாலான் முன்ஷியில் உள்ள ஒரு பழங்கால அபூர்வ பொருட்கள் விற்கும் கடை மற்றும் மலாக்காவின் Pokok Mangga வில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்
உரிமையாளர்கள் இல்லாதபோது வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்துவந்த இக்கும்பலின் நடவடிக்கை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Christopher தெரிவித்தார். இந்த சோதனையின் விளைவாக, தங்கத் தகடுகள், பல்வேறு பழைய நாணயங்கள், கைதொலைபேசிகள் , மடிக்கணினிகள், விவேக தொலைபேசிகள் , டிசைனர் கடிகாரங்கள் மற்றும் அவர்களின் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் 20 குற்றப் பின்னணிகளை கொண்டிருப்பதும் தெரியவந்தது.



