
கோலாலம்பூர், ஜனவரி-30, சில முக்கிய அம்சங்களுக்கு அரசாங்கம் உரிய தீர்வு கண்டால், DEB எனப்படும் புதியப் பொருளாதாரக் கொள்கை மீதான மலாய்க்காரர் அல்லாதோரின் அதிருப்தி குறையக்கூடும்.
முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் அவ்வாறு கூறியுள்ளார்.
கல்வி உள்ளிட்ட துறைகளில் சம வாய்ப்புகள் தரப்பட்டால், DEB கொள்கையின் கீழ் மலாய்க்காரர்களும் இதர பூமிபுத்ராக்களும் அனுபவிக்கும் சிறப்புச் சலுகைகள் மீதான அவர்களின் ‘வருத்தம்’ தணியுமென கைரி சொன்னார்.
தம்மைப் பொருத்தவரை, பூமிபுத்ராக்களுக்கு இருக்கும் சலுகைகள், மலாய்க்காரர் அல்லாதோரின் கண்களை பெரிதாக உறுத்துவதில்லை.
ஆனால், அனைத்துப் பாடங்களிலும் A பெற்றும் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயில வாய்ப்புக் கிடைக்காதது போன்ற நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போவதே அவர்களின் தீராத வலியாக உள்ளது.
அதை மட்டும் அரசாங்கம் நிவர்த்தி செய்து விட்டால், DEB மீதான அவர்களின் அதிருப்தி அதுவாக அகன்று விடும் என, தனது Keluar Sekejap போட்காஸ் தொடரின் புதியப் பதிவில் KJ சொன்னார்.
கல்வி வாய்ப்புகளில் DEB-யின் இன விகிதாச்சார அடிப்படையிலான கொள்கை, பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் மீது பாகுபாடு காட்டும் நடவடிக்கை என காலங்காலமாகவே அதிருப்தி நிலவுகிறது.
பூமிபுத்ராக்களைக் கைத் தூக்கி விடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட DEB கொள்கையை, படிப்படியாக அகற்றித்தான் ஆக வேண்டுமென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் அண்மையில் கூறியிருந்தது குறித்து கைரி பேசினார்.
1969, மே 13 இனக்கலவரத்தின் எதிரொலியாக 1971-ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமர் துன் அப்துல் ரசாக் இந்த DEB கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
பெரும்பான்மை இனத்தவர்களான பூமிபுத்ராக்களுக்கு ஆதரவான – உறுதியான செயல் திட்டங்கள் மூலம், இனங்களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதை அது நோக்கமாகக் கொண்டது.