
கோலாலம்பூர், மார்ச் 5 – யாசி எனப்படும் மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரியத்தின் கலைக்கோர் விருதளிப்பு விழா மார்ச் 31 ஆம்தேதி மாலை 6 மணிக்கு செந்தூல் HGH மண்டபத்தில் நடைபெறும்போது எந்தவொரு கலைஞர்களும் விடுபட மாட்டார்கள் என அதன் அறங்காவலரும் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
முழுக்க முழுக்க கலைஞர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்த இயக்கம் நலிந்த கலிஞர்கள் மற்றும் கலைத்துறைக்காக தன்னலம் கருதாமல் தொடர்ந்து சேவையாற்றிவரும் மண்ணின் மைந்தர்களை மறந்துவிடாது என ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் 35 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும் என்பதோடு 12 மூத்த கலைஞர்களுக்கு பண முடிப்பும் வழங்கப்படவுள்ளது.
இதனிடையே டத்தோஸ்ரீ எம். சரவணன் முழு ஒத்துழைப்போடு மிகவும் சிறப்பான முறையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கலைஞர்கள் அறவாரியத்தின் தலைவரான டத்தோ வி.கே.கே தியாகராஜன் கூறினார்.
இந்த விருதளிப்பு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மலேசிய இந்திய கலைஞர்களின் நலன்களுக்காக கடந்த 1999 ஆம் ஆண்டு மறைந்த துன் டாக்டர் S.சாமிவேலு அவர்களால் மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரியம் தொடக்கிவைக்கப்பட்டது.
நேற்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் கூட்டத்தில் அதன் செயலாளர் சங்கமம் சுப்ரா, அறங்காவலர் நாகராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர்களான கலைஞர் ராமச்சந்திரன், பிரான்சிஸ் சில்வன், சந்திரா சூரியா, ம.இ.கா. ஊடகப் பிரிவின் தலைவர் சிவசுப்ரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.