கோலாலம்பூர், அக் 16 – எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்தியர்களுக்கான சமூக பொருளாதார உருமாற்ற திட்டத்திற்காக நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய செயல் திட்டத்தை அறிவிக்கும்படி (i25) எனப்படும் 22 மலேசிய இந்திய அரசுசாரா அமைப்புகளின் கூட்டமைப்பு இன்று கோரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 2023-இல் ஒற்றுமை அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து இந்திய சமூகத்திற்காக பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இந்திய சமூக உருமாற்றத்திற்கான ஒரு விரிவான திட்டம் தேவைப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி நாதன் கேட்டுக் கொண்டார்.
பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் வேளையில் இந்திய சமுக உருமாற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பின் உறுப்பினரான ரவிந்திரன் அர்ஜூனன் தெரிவித்தார்.
இந்திய சமூகம் பின்தங்கிவிடாமல் இருப்பதற்காக அவர்களுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு போதுமான நிதி உதவிகள் ஒதுக்கப்பட வேண்டும் என (i25) அமைப்பின் மற்றொரு உறுப்பினரான குணசேகரன் கருப்பையா வலியுறுத்தினார்.
ஒட்டு மொத்தத்தில் அடுத்த ஆண்டுக்கான புதிய வரவு செலத்திட்டத்தில் மலேசிய இந்தியர் பெருந்திட்டத்திற்கு புத்துயிர் அளித்து , இந்தியர்களின் சமூக மேம்பாட்டிற்கு போதுமான நிதி வளங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என (i25) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதன் வழி வளப்பமிக்க இணக்கமான மலேசியாவை உருவாக்கும் அதே வேளையில் ஒவ்வொரு சமூகமும் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும் என S.P Nathan அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.