
கோலாலம்பூர், பிப்ரவரி-23 – மலேசியக் குழந்தை புற்றுநோய் சங்கமான CCAM, கோலாலம்பூர் Berjaya Times Square ஹோட்டலில் நேற்றிரவு நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியை நடத்தியது.
பிப்ரவரி 15-ல் அனுசரிக்கப்படும் அனைத்துலகக் குழந்தை புற்றுநோய் தினத்தை ஒட்டி அந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
Berjaya குழுமத் தலைவரும் கொடைவள்ளலுமான தான் ஸ்ரீ வின்சென்ட் தான் ஆதரவில் நடைபெற்ற அந்நிகழ்வில் திரட்டப்பட்ட நிதியானது, நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை வழங்கி அவர்களின் உயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளித்தால் அவர்கள் குணமடையயும் உயிர் வாழவும் வாய்ப்புகள் அதிகமென, CCAM தோற்றுநரும் தலைவருமான லாவண்யா கணபதி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இசைப் படைப்புகளுடன் கூடிய இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஆர்வலர்கள், வர்த்தக நிதி ஆதரவாளர்கள், பொது மக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமைந்ததாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், புற்நோயை எதிர்த்துப் போராடும் CCAM திட்டங்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில், வரும் ஜூலையில் வட ஐரோப்பாவில் துணிகர சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
ஜூலை 23 தொடங்கி ஃபின்லாந்தின் ஹெல்சிங்கி முதல் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வரை ஆயிரணக்கான கிலோ மீட்டர் தூரத்தை உட்படுத்தி, ரோமன் என்பவர் தனியாக இந்த சைக்கிள் பயணத்தில் ஈடுபடுகிறார்.
புற்றுநோயால் அவதியுறும் குழந்தைகளைக் காப்பாற்றிட, தங்களால் இயன்ற இது போன்ற காரியங்களில் நல்லுள்ளங்கள் ஈடுபட்டு வருவதாக லாவண்யா நெகிழ்ச்சியுடன் கூறினார்.