கோலாலம்பூர், நவம்பர் 20 – மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனது எழுத்துப்பணிக்காக மலேசியச் சாதனைப் புத்தகத்தில் முத்திரைப் பதிக்கும் முதல் எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறார் எழுத்தாளர் பாவை.
புஷ்பலீலாவதி என்ற இயற்பெயரைக் கொண்ட எழுத்தாளர் பாவை, குடும்பச் சூழல் காரணமாக ஆறாம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்தியவராவர்.
எனினும், தனது சொந்த முயற்சியில் தமிழ் நாளிதழ்கள், சஞ்சிகைகள் வாசித்து, மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டு வானொலி நாடகங்கள், சிறுகதைகள் என 40 படைப்புகளை அவர் ஒலியேற்றியுள்ளார்.
உள்நாட்டுப் பத்திரிக்கைகள், சஞ்சிகைகளில் 250 சிறுகதைகள் படைத்துள்ள நிலையில், 30 கட்டுரைகள், 5 நாவல்கள், 100க்கு மேற்பட்ட மரபு கவிதைகளையும் எழுதிக் குவித்துள்ளார்.
இந்நிலையில் 60 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வரும் பாவை அவர்களுக்கு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பரிந்துரையில், மலேசியச் சாதனைப் புத்தக விருது கிடைக்கப்பெறுகிறது.
அதனைக் கெளரவிக்கும் விதமாக, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள பார்வையற்றோர் சங்கக் கட்டிடத்தில் விருது விழா ஒன்று ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பாவை மலேசியச் சாதனைப் புத்தக விருது பெறவிருக்கின்ற இந்த நிகழ்ச்சியில் அவரது சமகால எழுத்தாளர்களோடு, இளம் தலைமுறை எழுத்தாளர்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மோகனன் பெருமாள் கேட்டுக் கொண்டார்.