
மும்பை, ஜனவரி-26-கடல் மார்க்கக் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட, மலேசியாவின் _‘Op Jack Sparrow’_ விசாரணையுடன் தொடர்புடைய 3 குற்றவாளிகள், இந்தியாவின் மும்பையில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இம்மூவரும், வன்முறைக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் மலேசியப் போலீஸாரால் தீவிரமாக தேடப்பட்டு, இதுநாள் வரை வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தவர்கள்.
இந்நிலையில் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டு, மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் உயரடுக்கு பாதுகாப்பில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
நவீந்திரன் ராஜ் குமரேசன், ஸ்ரீ தரன் சுப்ரமணியம், பிரதிஃப்குமார் செல்வராஜ் ஆகிய அம்மூவரும் மலேசிய போலீசார் வருவதற்காக காத்திருக்கின்றனர்.
முன்னதாக, மான்செஸ்டர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அம்மூவரும், அதிக ஆபத்தான நபர்கள் எனக் கூறி பிரிட்டன் குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மூவரும் பின்னர் இந்தியாவுக்குத் திரும்பியதும், மும்பை விமான நிலையத்தில் கலவரமே ஏற்பட்டு விட்டது.
தாங்கள் தடுத்து வைக்கப்படுவதை உணர்ந்ததும் மூவரும் ஆக்ரோஷமாக மாறி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் அதில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க மூவரும் 24 மணி நேர காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த 48 மணி நேரங்களில் மலேசியப் போலீஸ் படையின் சிறப்புக் குழு மும்பைப் பறக்கும்.
கைதானவர்கள் மலேசியா திரும்பியதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



