
கோலாலம்பூர், பிப் 4 -மலேசியா எனது இரண்டாவது தாயகம் திட்டத்தின் கீழ் மலேசியாவில் வீடுகள் வாங்குவதில் பெரும்பாலும் சீனா, தைவான் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
இந்த மூன்று நாடுகள் உட்பட இதர சில நாடுகளைச் சேர்ந்த 744 பேர் மலேசியாவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் ( Tiong King Sing ) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்வது உட்பட, மேலும் 2,637 பங்கேற்பாளர்கள் தற்போது வீடுகளை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை , மலேசியாவில் எனது இரண்டாவது தாயகம் திட்டத்தின் புதிய கட்டத்தின் கீழ் சொத்து வாங்குவதற்கான முதல் 10 நாடுகளின் பட்டியலில் 304 பேர் சீனாவையும், அதைத் தொடர்ந்து தைவானைச் சேர்ந்த 91 பேரும் , சிங்கப்பூரைச் சேர்ந்த (63) பேரும் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 41 பேரும் அடங்குவர். இதுதவிர பிரிட்டனைச் சேர்ந்த 40 பேர், ஹாங்காங்கிலிருந்து 34 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 பேரும் இங்கு வீடுகளை வாங்கியுள்ளனர். மேலும் வங்காளதேசம் , தென் கொரியா , இந்தோனேசியா மற்றும் ஜப்பான் மக்களில் சிலரும் இங்கு சொத்துக்களை வாங்கியுள்ளனர் என மக்களவையில் கேள்விக்கு பதில் அளித்தபோது தியோங் இத்தகவலை வெளியிட்டார்.
அதே வேளையில் மலேசியாவில் எனது இரண்டாவது தாயகம் திட்டம் குடியுரிமை அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதியை வழங்காது. அதற்குப் பதிலாக இந்த திட்டம் பல-நுழைவு விசா வசதிகளுடன் கூடிய நீண்டகால சமூக வருகை பாஸை வழங்குகிறது. இதன்வழி வெளிநாட்டினர் ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை இங்கு தங்கியிருக்க முடியும் என Tiong விவரித்தார்.



