கோலாலம்பூர், அக்டோபர்-5 – சவால் மிகுந்த காலக்கட்டத்திலிருக்கும் தமிழ்ப் பத்திரிகைத் துறைக்கும் ஊடகத்தினருக்கும் அரசாங்கம் உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் தலைவர் பி.பிரபாகரன்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்துடனான சிறப்புச் சந்திப்புக்குப் பிறகு அவர் இதனை பேசினார்.
மித்ரா வாயிலாக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்துக்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்து கலந்தாய்வு நடத்தினோம்.
கூடிய விரைவிலேயே அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் குறிப்பிட்டார்.
அச்சந்திப்பில், சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் உள்ளிட்ட சுமார் 40 தமிழ் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
இவ்வேளையில், இவ்வாண்டுக்கான 100 மில்லியன் மித்ரா நிதி ஒதுக்கீட்டில் 95.4% அங்கீகரிக்கப்பட்டு, அனைத்தும் திட்டமிட்டபடி போய்க்கொண்டிருப்பதாக பிரபாகரன் சொன்னார்.
மித்ராவிடம் நிதி பெற விரும்பும் அரசு சார்பற்ற அமைப்புகளின் (NGO) வசதிக்காக, வரும் அக்டோபர் 15 தொடங்கி நவம்பர் 14 வரை சிறப்பு இணைய அகப்பக்கம் திறக்கப்படுகிறது.
பொத்தாம் பொதுவாக அல்லாமல், என்ன திட்டம், என்ன குறிக்கோள் உள்ளிட்ட முழு விவரங்களுடன் வரும் விண்ணப்பங்களே பரிசீலிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.